Thursday, 13 June 2019

நம் ஜெபத்திற்கு ஏன் பதில் வருவதில்லை

BY Repent 1 comment

நம் ஜெபத்திற்கு ஏன் பதில் வருவதில்லை 




சங்கீதம் 65:2ல் "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்". என்பதால் எல்லா ஜெபத்தையும் அவர் கேட்கிறார் (hears). ஒரு விதத்தில் நம்முடைய கர்த்தர் நமது எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிக்கிறார். ஒரு சில சமயங்களில் அவர் "ஆம்", "இல்லை" அல்லது "காத்திரு" என்று சொல்கிறார்.

நாம் நம்முடைய பாவங்களை மறைத்து வைத்திருந்தால் அது நம்முடைய ஜெபத்தின் பதிலுக்கு ஒரு தடையாக அமையும். சங்கீதம் 66:18ல் "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்று வாசிக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்முடைய ஜெபமானது சுயநலமாகவும், தேவனை மகிமைபடுத்தாமல் இருந்தாலும் அப்படியாகும். சில சமயங்களில் தேவன் நம்முடைய வேண்டுதலுக்கு பதில் தந்தால் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக காணப்படுவோம் என்று அவர் அறிந்திருப்பின் பதில் தராமல் இருப்பார்.
வேதாகமத்தில் ஒன்று தெளிவாகக் காண்கிறோம். தேவன் எப்பொழுதெல்லாம் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாரோ அப்போதெல்லாம் "சந்தோஷத்தின் நிறைவைக்" காண்கிறோம்.

"கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று மட்டும் சொல்லாமல் "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" என்று தெளிவாக வாசிக்கிறோம். வேதாகமெங்கிலும் தானியேல், தாவீது, பவுல் என்று ஜெபித்தவர்கள் எல்லாரையும் இதற்கு உதாரணமாக வைக்கலாம்.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் "எங்களுக்கு புசிக்கும்படி இறைச்சியை தாரும்" என்று மோசேயிடம் 
முறுமுறுப்புடன்மன்னாவை விட்டு இறைச்சியை இச்சித்து கேட்டனர். தேவன் அதற்கு பதில் கொடுத்தாலும் அங்கே ஒரு பெரிய அழிவினை கொண்டுவந்தது.

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். எனவே நாம் தேவனிலும் அவருடைய சத்தியத்தில் நிலைத்திருக்கிறோமா, அதாவது அவருக்குப் பிரியமாக வாழ்கிறோமா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. ஒரு தந்தைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டார். கர்த்தரோ தெளிவாக அவரிடம், "இல்லை, உனக்கு மகனைக்கொடுப்பது என்னுடைய சித்தமல்ல, உன்னுடைய மகள்களே உனக்கு ஒரு மகனைக் காட்டிலும் பெரிதாக இருப்பார்கள்" என்றார். இருப்பினும் தந்தை ரொம்பவே உபவாசித்து, வருத்தி மிகவும் ஜெபித்து கேட்டார். இறுதியாக தேவன் அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஆனால் அந்த மகன் குடிகாரனும் கெட்டகுமாரனுமாக மாறிபோனான். தந்தைக்கோ வயதாகியது, இருதயம் உடைந்து வேதனையுடன் ஏன் தேவனை தொல்லை செய்து ஒரு மகனை கேட்டோம் என்று வருத்தத்துடன் இருந்தார். தன் மகன் நரகத்துக்கு போவான் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் தேவன் சொன்னபடியே அவருடைய வயதான காலத்தில் அவருடைய மகள்கள் அவரை ஒரு மகன் செய்வதைவிட மேலாகவே கவனித்தனர்.


   'உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' எனவே நீ கலங்காதே என் மகளே, திகையாதே என் மகனே, நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

ஏசாயா 30:18 அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.


ஏசாயா 49:23 நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை.

நமது ஜெபங்கள் ஒருவேளை நம்முடைய பார்வைக்கு நன்றாக தோன்றலாம், அவைகளுக்கு பதில் இல்லாமல் இருக்கலாம். தேவன் ஒருவேளை உங்களை ஏழையாக வைத்திருக்கலாம் அதேசமயம் தேவபயமின்றி வாழும் ஒருவன் ஐசுவரியவானாக இருக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள் தடைபட்டு, மற்றவர்கள் மேலே செல்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். இவைகள் எல்லாவற்றிலும் நாம் தேவனை கேள்வி கேட்பதையும், முறுமுறுப்பதையும் விட்டுவிட்டு, பதில் கிடைக்காத ஜெபங்களுக்காக தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

ஏனெனில் இறுதியில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.

1 comment:

  1. super nice
    i am realise where i am thank you God always with you

    ReplyDelete